உலகச் சந்தையில் தங்கம் விலை இந்த வாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 1.8 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 4,620 டாலர் என்ற அளவில் நிலையாக இருந்தாலும், வாரம் முழுவதுமே விலை சரிவுப் பாதையிலேயே இருந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஒரு மாத கால சரிவைக் கண்ட தங்கம், தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா மற்றும் சீனா போன்ற உலகின் முன்னணி தங்க நுகர்வு நாடுகள் விடுமுறை காரணமாகச் சந்தை மந்தமாக இருப்பதால், அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த விலை சரிவிற்கு மிக முக்கியக் காரணம், ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலருக்கும் மேலாக நீடிப்பதால், உலக அளவில் பணவீக்கம் (Inflation) அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக, பணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும். ஆனால், தற்போதைய சூழலில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள், வட்டி விகிதங்களைக் குறைக்காமல் அப்படியே வைத்திருக்கின்றன. இதுதான் தங்கத்தின் விலை சரிவிற்குக் மிக முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.
வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் வட்டி அதிகம் கிடைக்கக்கூடிய அரசுப் பத்திரங்கள் மற்றும் டாலர் சார்ந்த முதலீடுகளை நாடுகிறார்கள். தங்கம் எந்தவிதமான வட்டியையும் தராத முதலீடு என்பதால், வட்டி விகிதம் குறையாத வரை, முதலீட்டாளர்கள் தங்கத்தை விட மற்ற முதலீடுகளையே அதிகம் விரும்புகிறார்கள். இதனால் தங்கத்திற்கான தேவை உலக அளவில் குறைந்திருக்கிறது. ஒருபுறம் ஈரான் நாடு, அமெரிக்கா மீது கடுமையான தாக்குதல்களை நடத்துவதாக மிரட்டல் விடுத்துப் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைப் பலவீனப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது என்பதை உறுதிப்படுத்துவதால், தங்கம் விலை குறுகிய காலத்தில் பெரிய ஏற்றத்தைச் சந்திக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சந்தையில் பெரிய அளவில் வர்த்தகம் நடக்காத நிலையில், அடுத்த சில நாட்களில் வரக்கூடிய புள்ளிவிவரங்கள் தான் தங்கத்தின் போக்கை மாற்றும் என்று சந்தை நிபுணர்கள் கணிக்கிறார்கள். போர்க்கால பதற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதாரக் கொள்கைகள் தங்கம் விலையை அழுத்தி வரும் இந்த சூழல், முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
