திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அருகே உள்ள கொண்டாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. தற்போது அரையாண்டு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மோகித், இன்று மதியம் தேர்வு எழுத தயாராக இருந்துள்ளார். மதிய உணவு நேரத்தில் பள்ளியின் வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து மோகித் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மாணவன் மோகித் இடிபாடுகளுக்குள் சிக்கினார். உடனே ஓடி வந்த ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
