நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான மாவீரன் படத்தில், சிவகார்த்திகேயனும் தனது காதுகளில் மட்டும் ஒலிக்கும் ரகசிய குரலைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வதை போல காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதே போன்ற ஒரு சம்பவம் சென்னையில் ஒரு இளைஞருக்கு நடந்துள்ளது. சென்னை மேற்கு முகப்பேர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரோஷன் நாராயணன் (வயது 24). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பதி சென்றிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த ரோஷன் நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரோஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, தற்கொலைக்கு முன்பு ரோஷன் நாராயணன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், “எனது காதுக்குள் யாரோ அழைப்பது போல தொடர்ந்து ஒலி கேட்கிறது. சகோதரரிடம் முன்பு சண்டை போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
