திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(34). அதே பகுதியில் வெல்டிங் கடையில் வேலை செய்துவருகிறார்.
சக்திவேலுக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. சக்திவேல் தனக்கு தெரிந்த மருத்துவருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வீட்டிற்க்கே வந்த அந்த நபர் ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட அடுத்த அரை மணி நேரத்தில் சக்திவேல் மூச்சு பேச்சின்றி மயக்கம் அடைந்துள்ளார்
இதையடுத்து அவரது குடும்பத்தினர், உடனடியாக சக்திவேலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர் .
இது குறித்து சக்திவேலின் தாயார், என் மகன் உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்களாக வீட்டில் இருந்தான். அவனிடம் மருத்துவமனைக்கு செல்லலாம் என கேட்ட போது, எனக்குத் தெரிந்த மருத்துவர் இருக்கிறார். அவருக்கு போன் பண்ணா வந்து ஊசி போடுவார், உடனே சரியாகிவிடும் என சொன்னான். ஆனா அவன் உயிரே போயிடுச்சு என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த நபரின் சார்பாக, போலி மருத்துவர் குறித்து எந்த வித புகாரும் தெரிவிக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.
பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்க்காமல், அலட்சியமாக போலி மருத்துவர்களை நாடுவது இத்தகைய விபரீதங்களுக்கு உள்ளாகும். இதுகுறித்து போதி விழிப்புணர்வை ஏற்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
