உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்திய ஒரு புகைப்படத்தை ஸ்பானிஷ் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ளார். அதில் உலகின் முதல் வெள்ளை நிற ஐபீரியன் லின்க்ஸ் (Iberian Lynx) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூர் வனப்பகுதியில் அவர் எடுத்த இந்தப் படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
பொதுவாக ஐபீரியன் லின்க்ஸ் இனங்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிற தோலுடன் காணப்படும். ஆனால், இம்முறை கேமராவில் பதிவான லின்க்ஸின் உடல் முழுவதும் வெள்ளையாகத் தோன்றியது. இது மரபணு மாற்றம் அல்லது ‘லூசிசம்’ எனப்படும் நிறமாற்றக் காரணத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று வனவிலங்கு நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலக வனவிலங்கு நிதியமான World Wildlife Fund தெரிவித்ததாவது, ஒருகாலத்தில் அழிவின் விளிம்பில் இருந்த இந்த இனத்தின் எண்ணிக்கை தற்போது மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்த பூனை இனத்திற்கு நீளமான கால்கள், குறுகிய வால், முகத்தில் தாடி மற்றும் காதுகளில் கருப்பு முடி கொத்துகள் என்பன முக்கிய அடையாளங்களாக உள்ளன.
2002ஆம் ஆண்டில், இப்பூனைகள் 100க்கும் குறைவாக மட்டுமே இருந்ததாக அறியப்பட்டது. தற்போது வெள்ளை நிற லின்க்ஸ் பதிவாகியிருப்பது, இந்த இனத்தின் மீட்சிக்கு புதிய நம்பிக்கையையும், இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
புகைப்படத்தில் அழகாகத் தோன்றினாலும், காடுகளில் இது ஒரு ஆபத்தான வேட்டை விலங்கு என வனத்துறை எச்சரித்துள்ளது. இவ்விதமான அரிய காட்சியை பார்த்த நெட்டிசன்கள் “இது ஒரு மாயாஜால உயிரினம் போல உள்ளது”, “இயற்கை நம்மை நம்பமுடியாத அற்புதங்களால் ஆச்சரியப்படுத்துகிறது” எனப் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த வெள்ளை லின்க்ஸ். இயற்கை இன்னும் அதிசயங்களை உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறது என்பதற்கான உயிரோடு நிற்கும் சான்றாக மாறியுள்ளது.
