இந்தியர்களுக்குப் பேரிடி கொடுத்த அமெரிக்கா! H-1B விசா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

அமெரிக்காவில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

வேலை இழந்த பிறகு அமெரிக்காவிலேயே தங்கிப் புதிய வேலையைத் தேடுவதற்காக வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் கால அவகாசத்தை (Grace Period) முற்றிலுமாக ரத்து செய்ய அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு புதிய திட்டத்தைப் பரிசீலித்து வரும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அதற்கான ஒப்புதலைப் பெற வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.

2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 60 நாட்கள் அவகாசம் தான், அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு வளையமாக இருந்து வருகிறது.

திடீரென வேலை பறிபோகும் போது, தங்கள் குடும்பத்தை அங்கிருந்து அழைத்துச் செல்வதற்கோ அல்லது மாற்று வேலை தேடுவதற்கோ இந்த 60 நாட்கள் மிகவும் உதவியாக இருந்தது.

ஆனால், புதிய சட்டத்தின்படி வேலை இழந்தால் அடுத்த கணமே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது H-1B மட்டுமல்லாமல், L-1, O-1 போன்ற பல்வேறு விசா பிரிவினருக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

இந்த முடிவு ஏன் இந்தியர்களைப் படுமோசமாகப் பாதிக்கும் தெரியுமா? அமெரிக்காவில் H-1B விசா பெறுபவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் தான். சுமார் 52 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், இந்தத் திடீர் மாற்றம் அவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடும்.

இது குறித்துப் பேசிய முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகர் அஜய் ஜெயின் பூடோரியா, “இந்த முடிவு மிகவும் மனிதநேயமற்றது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் உழைத்து, வரி செலுத்திய மக்களை ஒரே நாளில் வெளியேறச் சொல்வது அவர்களின் வாழ்க்கையைச் சிதைத்துவிடும்.

தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு மற்றும் வீட்டு வாடகை போன்ற தனிப்பட்ட விஷயங்களை முடிக்கக்கூட அவர்களுக்கு நேரம் இருக்காது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், வேலை இழக்கும் இந்தியப் பணியாளர்கள் எவ்விதத் திட்டமிடலும் இன்றி உடனடியாகத் தாய்நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகும்.

இது அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News