ஃபேஸ் புக் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தாயைக் கண்டுபிடித்த கல்லூரி மாணவி

284
Advertisement

ஃபேஸ்புக் உதவியால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் தாயுடன் இணைந்த கல்லூரி மாணவி பற்றிய
சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்
ஏஞ்சலிகா வென்சஸ் ஸால்கடோ. இவரின் கணவர் பாப்லோ
ஹெர்ணான்டஸ். இந்தத் தம்பதியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு
ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் 2007 ஆம் ஆண்டு மனைவியைவிட்டுப்
பிரிந்துசென்றுவிட்டார் பாப்லோ ஹெர்ணான்டஸ்.
அப்போது தன்னுடன் தனது 5 வயது மகள் ஜாக்குலினையும்
அழைத்துச்சென்றுவிட்டார்.

ஆனால், ஏஞ்சலிகாவால் ஜாக்குலினைப் பிரிந்திருக்க முடியவில்லை.
காவல்துறையில் புகார் செய்தார். என்றாலும், மகளின்
இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

காலம் உருண்டோடிவிட்ட நிலையில், ஜாக்குலின் வளர்ந்து கல்லூரிக்குச்
செல்லத் தொடங்கினார். என்றாலும், தாயின் நினைவுடனேயே
வாழ்ந்து வந்தார். தந்தையிடம் தனது தாயைப் பற்றிய
விவரங்களைக் கேட்டார். ஆனால், பாப்லோ சொல்ல மறுத்துவிட்டார்.

இதனால், வேறுவிதமாக சிந்திக்கத் தொடங்கினார் ஜாக்குலின்.
தனது தாயின் பெயரான ஏஞ்சலிகா வென்சஸ் ஸால்கடோ என்பதை
நினைவில் வைத்திருந்த அவர் ஃபேஸ்புக்கில் தேடத் தொடங்கினார்.
அதில் பலரின் முகங்கள் வந்தன.

அதில் தன்னுடைய முகச்சாயலோடு இருக்கும் மெக்ஸிகோவைச்
சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்புகொண்டு பேசினார்.
தன் தந்தையால் 5 வயதில் கட்டாயமாகத் தாயிடமிருந்து
பிரித்துக்கொண்டு வரப்பட்டதாகக் கூறியுள்ளார்.
எதிர்முனையில் இதைக்கேட்ட அப்பெண் தன்னுடன் பேசுவது
மகள்தான் என்பதை உணர்ந்தார்.

ஆனாலும், ஏஞ்சலிகா புளோரிடா மாகாண காவல்துறை
அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகளும் ஜாக்குலின், ஏஞ்சலிகாவின்
மகள்தான் என்பதை உறுதிசெய்தனர்.

இதன்பிறகு, ஜாக்குலின் வசித்துவரும் டெக்சாஸ் மாகாணத்துக்கு
வந்தார் ஏஞ்சலிகா. அப்போது தாயும் மகளும் ஆரத்தழுவிப்
பாசத்தைப் பரிமாறிக்கொண்டனர்.

14 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயும் மகளும் ஃபேஸ்புக்
உதவியால் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன்,
சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.