இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை நெருங்கியுள்ள நிலையில், அசைவ உணவுப் பொருட்களின் விலை ஜூன் மாதத்தில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் சிக்கன், மட்டன், மீன், முட்டை போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அசைவ உணவுகளுக்கான தேவை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உயர்ந்துள்ளதால், இறைச்சி, மீன் மற்றும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த தேவை, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இணைந்து விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
மேலும், எரிவாயு விலை உயர்வால் ஏற்கனவே பல உணவகங்கள் உணவுகளின் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது கறி, மீன், முட்டை போன்ற மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை மற்றும் மீன் உணவுகளின் விலையும் மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஜூன் மாதத்தில் முட்டை விலை 3.71 சதவீதம் உயர்ந்த நிலையில், நாமக்கலில் ஒரு முட்டையின் விலை ரூ.6.80 வரை உயர்ந்தது. மாட்டு இறைச்சி விலை 3.41 சதவீதமும், மீன் மற்றும் இறால் விலை 2.9 சதவீதமும் உயர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளன. அதேபோல், சிக்கன் விலை கடந்த ஒரு ஆண்டில் 10.83 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக, பன்றி இறைச்சி விலை மட்டும் 1.21 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் தாக்கமாக, மே மாதத்தில் 4.66 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து, போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததும் இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதனால் இந்திய குடும்பங்களின் மாதாந்திர உணவுச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது.
