தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்ற திருத்தம் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, திமுகவின் ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். இதற்காக டெல்லியில் இருந்து சோனியா காந்தி மற்றும் கார்கே விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் சென்னை சென்று, சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சந்திக்கிறோம். தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறை போல உறுதியாக நின்றுள்ளார். தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாம் (திமுக-வும் காங்கிரஸும்) ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
