நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடையில்லா சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைத்துச் செல்வது அல்லது FASTag ஒட்டாமல் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், வழக்கமான சுங்கக் கட்டணத்தைவிட 5 மடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) தொழில்நுட்பம் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமலேயே கட்டணம் தானாக வசூலிக்கப்படும். இதற்காக FASTag வாசிப்புக் கருவிகள் மற்றும் தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் கேமராக்கள் (ANPR) பயன்படுத்தப்படுகின்றன.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு நேரம் மற்றும் எரிபொருள் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 9 இடங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரனூர், நெமிலி, சென்னசமுத்திரம் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளில் MLFF தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டை தெளிவாக வைத்திருப்பதுடன், முறையான FASTag வசதியையும் பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டண ஏய்ப்பில் ஈடுபட்டால் இனி அதிக அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
