கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் 23ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றமும் காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
இதையடுத்து, நவம்பர் 27ஆம் தேதி மாலை கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் வீட்டில் வைத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைதுக்குப் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவில் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் 75, 78, 79, 132 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக PTI தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
