கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மற்றும் மனு அளிக்க வந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சியில் நடைபெறும் பாலியல் குற்றங்களில் 80 சதவீதம் ஆளுங்கட்சியினரே ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய முதலமைச்சர், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். குற்றச்சாட்டுகளை மறைக்க முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் முயற்சிப்பதாகவும், தவெக அரசு மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே ஆளுநரிடம் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, ஜூலை 31ஆம் தேதியே இந்தப் புகார் தலைமைச் செயலாளருக்குச் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் புகாரை முதலமைச்சரிடம் தெரிவித்தாரா எனக் கேள்வி எழுப்பினார். தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்திருந்தால் முதலமைச்சரும் குற்றத்தில் பங்குதாரர் எனக் குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு துணிவுடன் செயல்பட்டதாகவும், தவெக அரசு கூட்டணிக் கட்சிகளுக்காக இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்தார்.
