நாம் பயணங்களின் போதும், அன்றாட வாழ்விலும் மிகவும் பாதுகாப்பானது என நம்பிக் குடிக்கும் பிரபல பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள், குடிப்பதற்குப் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கமான சோதனையின் ஒரு பகுதியாக, பிஸ்லெரி நிறுவன வளாகத்தில் இருந்து மினரல் வாட்டர் அல்லாத அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். அந்தப் பரிசோதனையின் முடிவில், குடிநீரில் புரோமேட் என்ற வேதிப்பொருளின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அந்தக் குடிநீர் மாதிரி மேல்முறையீட்டு உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அங்கு நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையிலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாலி நியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் எனப்படும் நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு, அந்தத் தண்ணீர் பாதுகாப்பற்றது என மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இரண்டு ஆய்வகப் பரிசோதனைகளிலும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால், 2006-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் பிஸ்லெரி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை எஃப்எஸ்எஸ்ஏஐ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பிஸ்லெரி மட்டுமின்றி, தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக வசந்த் மசாலா, டிட்-பிட் ஃபுட்ஸ், மிமான்சா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆஷா கன்ஃபெக்ஷனரி உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஷா கன்ஃபெக்ஷனரி நிறுவனம் தயாரித்த சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீஸ் பிஸ்கட்டுகள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டு, சந்தையில் இருந்து அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளைப் பின்பற்றாத ஊர்மி லைஃப் சயின்சஸ் மற்றும் கௌர் ஆயுர்வேதிக் ஸ்டோர் ஆகிய நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத் தளங்கள், எனர்ஜி பானங்கள் மற்றும் மதுபான ஆலைகள் மீது உணவுப் பாதுகாப்பு ஆணையம் தனது பிடியை இறுக்கித் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
