திமுக முதல் தவெக வரை… யார் இந்த வி.எஸ்.பாபு?

சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர்,இன்று பிற்பகல் 2.24 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யார் இந்த வி.எஸ்.பாபு என்று பார்த்தால், ஒரு காலத்தில் வடசென்னை திமுகவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர்.2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

2011-ம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவானது. அந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டதால், வி.எஸ்.பாபுவுக்கு அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஸ்டாலின் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக வேலை செய்தார்.

ஆனால், அதற்குப் பிறகு திமுகவில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்த பி.கே .சேகர்பாபுவுக்கு ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த வி.எஸ்.பாபு, திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

ஆனால், அதிமுகவிலும் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் அவருடைய செல்வாக்கு குறைந்தது. இதற்கிடையில், 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வேலை செய்ததாகக் கூறி, 2018-ம் ஆண்டு வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேரை அதிமுகவில் இருந்து நீக்கினார்கள்.

அதன்பிறகு அரசியலில் கொஞ்சம் அமைதியாக இருந்த அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மீண்டும் கட்சியில் இணைந்தார். ஆனாலும் அங்கும் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்தார்.

இந்தச் சூழலில்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சந்தித்து அந்தக் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார்.

குறிப்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். செப்டம்பர் 23-ம் தேதி தமிழக முதல்வர் விஜய்யும் மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

பல நாட்களாக அவரது உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதனால் அவரது உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இப்படிப் பல நாட்களாக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த வி.எஸ்.பாபு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திமுகவில் தொடங்கி, அதிமுக வழியாக தவெகவுக்கு வந்து, கொளத்தூரில் ஸ்டாலினையே எதிர்த்து வெற்றி பெற்ற வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

Related News

Latest News