தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது … இனி CSK-வில் தல செய்யப்போகும் வேலை என்ன தெரியுமா ??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்பவருமான எம்.எஸ்.தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் கூறியதாவது:

எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வெற்றி, தோல்வி என அனைத்துச் சூழல்களிலும் நாங்கள் ஒன்றாகப் பயணித்துள்ளோம். எங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையும், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதையும்தான் இந்த உறவு இவ்வளவு வலுவாக இருக்கக் காரணம்.

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது தோனி சிஎஸ்கே அணியில் இடம்பெற வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது என் வாழ்க்கையில் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் ஒன்று. அவர் அணிக்காகப் படைத்த சாதனைகள் மட்டுமின்றி, அவரது தனிப்பட்ட குணங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை.தோனி எப்போதும் சிஎஸ்கே அணியின் அடையாளமாக இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் அவருடைய வீடு என்று தெரிவித்தார்.

சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் தோனி பற்றி கூறியதாவது:

தோனி போன்ற ஒரு சிறந்த வீரர் வாழ்நாளில் ஒருமுறைதான் கிடைப்பார். சிஎஸ்கே அணி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அவர் எங்களுடன் பயணித்து வருகிறார். அணியின் வளர்ச்சிக்கும் அடித்தளத்திற்கும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.

களத்தில் மட்டுமின்றி, களத்திற்கு வெளியேயும் அவர் அணிக்காகப் பல விஷயங்களைச் செய்துள்ளார். அவரது தலைமைப் பண்பு, எளிமை, அர்ப்பணிப்பு ஆகியவை மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுடன் அவர் ஏற்படுத்திய பிணைப்பு ஆகியவை தனித்துவமானவை.

இனிவரும் காலங்களில் அவர் சிஎஸ்கே அணியின் ஆலோசகராகத் தொடர்ந்து செயல்படுவார். அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தோனியின் அனுபவமும் ஆலோசனைகளும் அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்றார்.

சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில்:
தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது … இனி CSK-வில் தல செய்யப்போகும் வேலை என்ன தெரியுமா?

“கிரிக்கெட் வீரராக தோனி படைத்த சாதனைகள் எப்போதும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். அதைவிட முக்கியமாக, அவர் சென்னையைத் தனது ஊராக ஏற்றுக்கொண்டார். சென்னையும் அவரைத் தங்களில் ஒருவராகவே கொண்டாடியது.

அவர் வென்ற கோப்பைகள் மட்டுமல்லாமல், அந்த வெற்றிகளைப் பெற்ற விதமும் என்றும் நினைவுகூரப்படும். அதுவே அவரது உண்மையான மரபு.

இனி மைதானத்தில் மஞ்சள் நிற ஜெர்சியில் தோனியைப் பார்க்க முடியாது என்பது வருத்தமாக இருந்தாலும், எங்கள் இளம் வீரர்களுக்கு அவர் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கப்போவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தோனியின் கிரிக்கெட் சாதனைகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தில் தோனியின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மேலும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன்கள் பட்டியலில் தோனி முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழும் தோனி, சிஎஸ்கே அணிக்காக இதுவரை 5,314 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும், சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரை 272 போட்டிகளில் அவர் களமிறங்கியுள்ளார்.

கடைசி நேரத்தில் சிக்ஸர்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தருவது, புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட், இக்கட்டான சூழலிலும் பதற்றமின்றிச் செயல்படுவது, மின்னல் வேக ஸ்டம்பிங் எனத் தனது தனித்துவமான ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தோனி.

புதிய பொறுப்பில் தோனி:

கேப்டனாக இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தோனி, இனி ஆலோசகராக இருந்து இளம் வீரர்களை வழிநடத்த உள்ளார்.

மைதானத்தில் மஞ்சள் ஜெர்சியில் தோனியைப் பார்க்க முடியாவிட்டாலும், சிஎஸ்கே அணியுடனான அவரது பயணம் தொடர உள்ளது. 2027-ம் ஆண்டு முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்பட உள்ளதைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.

Related News

Latest News