செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் மீது நிறுவனங்கள் கொட்டிவரும் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால், அது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தில் போய் முடியும் என அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் எச்சரித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில், டிரம்ப் நிர்வாகம் பயன்படுத்தும் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசிய அவர், அமெரிக்க ஏஐ சிப்களைச் சீனா வாங்குவதற்கு வர்த்தகத் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்த சில மணி நேரங்களிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்து மூன்று விதமான கோணங்களை ஃபெடரல் வங்கி ஆய்வு செய்துள்ளது. முதல் நிலையில் உற்பத்தித்திறன் உயர்ந்து தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் சமமான லாபம் கிடைக்கும். இரண்டாவது நிலையில் வளர்ச்சி இருந்தாலும் ஆட்டோமேஷனால் ஊழியர்கள் வேலையிழப்பார்கள்.
ஆனால் மூன்றாவது நிலைதான் பங்குச்சந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரம்மாண்ட முதலீடுகளுக்குப் பிறகு ஏஐ நிறுவனங்களின் வருவாய் குறைந்து பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கினால், அது மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கும், கடுமையான வேலையின்மைக்கும் வழிவகுக்கும் என வார்ஷ் எச்சரித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சால் அமெரிக்கப் பங்குச்சந்தையான வால் ஸ்ட்ரீட் கடும் சரிவைச் சந்தித்தது. நாஸ்டாக் குறியீடு இரண்டு சதவீதத்திற்கும் மேலும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 1.42 சதவீதமும், டவ் ஜோன்ஸ் 436 புள்ளிகளும் சரிந்தன.
கடந்த வாரம் சிஇஓ ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்த அதிர்ச்சியில் இருக்கும் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 3.48 சதவீதமும், மைக்ரான் பங்குகள் ஆறு சதவீதத்திற்கும் மேலும் வீழ்ச்சியடைந்தன.
வரும் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது குறித்து வார்ஷ் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. மறுபுறம் அமெரிக்க டாலரின் மதிப்பு 52 வார உச்சத்தை நெருங்கியதால், தங்கம் மற்றும் வெள்ளி விலையும் ஓராண்டுக் காணாத சரிவைச் சந்தித்துள்ளன.
வெள்ளி நான்கு சதவீதத்திற்கும் மேல் சரிந்து 47.11 டாலராகவும், தங்கம் 3,872 டாலராகவும் வர்த்தகமானது. மனித அறிவை விஞ்சும் இயந்திரங்களாக இருந்தாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் என வார்ஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.!
