அமேசானுக்கு விழுந்த பெரிய இடி… மொத்தமும் காலி..10 நிமிடத்தில் நேர்ந்த ‘சோகம்’!!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்குப் போட்டியாக, அமேசான் நிறுவனம் முன்னெடுத்து வரும் ‘அமேசான் லியோ’ திட்டத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் (Cape Canaveral) ஏவுதளத்தில் இருந்து, அமேசானின் 40 அதிநவீன இணையச் செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்த ‘வல்கன்’ ரக ராக்கெட், புறப்பட்ட பத்தாவது நிமிடத்திலேயே நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்து முழுமையாகச் செயலிழந்தது.

இதனால் அமேசான் விண்ணுக்கு அனுப்பிய 40 செயற்கைக்கோள்களும் தங்களது இலக்கான சுற்றுப்பாதையை அடைய முடியாமல் கடலில் விழுந்து அழிந்தன.

போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பான ‘யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ்’ இயக்கிய இந்த வல்கன் ராக்கெட் மூலம், அமேசான் நிறுவனம் மொத்தம் 38 முறை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்திருந்தது.

உலகம் முழுவதும் அதிவேக சாட்டிலைட் இணையத்தை வழங்கும் நோக்கில், மொத்தம் 3,232 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி, வரும் 2026-ஆம் ஆண்டிற்குள் வணிக ரீதியான சேவையைத் தொடங்க ஜெஃப் பெசாஸ் திட்டமிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை சுமார் 400 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 40 செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் முயற்சியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் செலுத்தி, 26 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியதோடு, பூமிக்குத் திரும்பிய ராக்கெட்டை அந்தரத்தில் பிடித்துப் புதிய உலக சாதனை படைத்த அடுத்த நாளே அமேசானுக்கு இந்தச் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெஃப் பெசாஸின் சொந்த விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினின் ‘நியூ க்ளென்’ ராக்கெட் கடந்த மே மாதம் வெடிவிபத்தில் சிக்கி முடங்கியுள்ள நிலையில், தற்போதைய தோல்வி அமேசானுக்கு இரட்டைப் பின்னடைவாக மாறியுள்ளது.

விண்வெளிப் பயணங்களில் இதுபோன்ற எதிர்பாராத சவால்கள் இயல்புதான் என்றும், இந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்தகட்டப் பணிகள் தொடரும் என்றும் அமேசான் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வரும் நவம்பர் 23-ஆம் தேதி பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-6 ராக்கெட் மூலம் மேலும் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த அமேசான் திட்டமிட்டுள்ள நிலையில், பில்லியனர்களுக்கு இடையிலான இந்த விண்வெளி இணையப் போட்டி சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News