சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 16) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை (நவம்பர் 17) தீவிரப் புயலாக மாறி ஆந்திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 17ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி கனமழை பெய்யக்கூடும்.

நவம்பர் 18ஆம் தேதி இந்த மூன்று மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருப்பவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

Latest News