அமெரிக்காவில் H-1B விசா மற்றும் கிரீன் கார்டு நடைமுறைகளில் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அந்நாட்டு குடிமக்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் டிரம்ப் நிர்வாகம் விசா விதிகளை கடுமையாக்கி வருகிறது. இதற்கிடையே அமெரிக்க தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தோனி டி’எஸ்போசிட்டோ, H-1B விசா முறையை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாக எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் திறமையான பணியாளர்கள் கிடைக்காத சூழலில் மட்டுமே வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை அழைத்து வந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதைத் தடுப்பதே புதிய நடவடிக்கைகளின் நோக்கமாகும். இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக, இன்போசிஸ் நிறுவனத்தின் H-1B விசா பதிவுகள் 8,886-ல் இருந்து 759 ஆகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் பதிவுகள் 5,955-ல் இருந்து 284 ஆகவும் சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், PERM எனப்படும் கிரீன் கார்டு நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையிலும் சில நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
இந்த அதிரடி மாற்றங்களால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே உள்ளூர் பணியாளர்களை நியமிப்பது அல்லது இந்தியாவில் இருந்தே பணிகளை மேற்கொள்வது போன்ற மாற்று வழிகளைத் தேடி வருகின்றன. தொடர்ந்து கடுமையாகும் விசா விதிகள் இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்க வேலைவாய்ப்பில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
