நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆன விராட் கோலி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டியில் ரன் குவிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்தப் போட்டியிலும் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து கோலி ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கோலி மட்டுமல்லாமல், கடந்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன ரோஹித் சர்மாவும் இந்தப் போட்டியில் ஏழு ரன்களில் வெளியேறினார்.
இருப்பினும், இந்திய அணி நிர்ணயித்த 209 ரன்கள் என்ற குறைந்த இலக்கை நமது பந்துவீச்சாளர்கள் அபாரமாகப் போராடிக் காப்பாற்றியதால், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கடைசி இரண்டு போட்டிகளிலும் கோலி மற்றும் ரோஹித் அடுத்தடுத்துச் சொதப்பியதால், ஒருநாள் அணியில் இவர்களின் எதிர்காலம் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, கடந்த பன்னிரண்டு முதல் பதினான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் இந்திய அணிக்காகத் தொடர்ந்து ரன்களைக் குவித்த ஜாம்பவான்களை, ஒரேயொரு போட்டி அல்லது ஒரு தொடரை வைத்து எடைபோடக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் கோலியும் ரோஹித்தும் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாகவும், ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்தோடும் விளையாடியதை உணர முடிந்ததாக ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் விரைவாக ஆட்டமிழப்பது சாதாரண விஷயம்தான் என்றும், நியூசிலாந்து தொடரின் கடைசி நாளில் ரன் அடிக்காததை வைத்து அவர்களின் இத்தனை ஆண்டுகாலச் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக விராட் கோலி குறித்துப் பேசிய ஜடேஜா, பேட்டிங்கில் ரன் எடுக்காவிட்டாலும் மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் எதைப் பார்க்க வந்தார்களோ அது அவர்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவுட் ஆன சோகத்தில் மைதானத்தின் ஒரு ஓரத்தில் கோலி அமைதியாக நின்றிருந்தால் தான் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.
ஆனால் நாள் முழுவதும் மைதானத்தில் துடிப்புடன் செயல்படுவதும், கேட்ச் நழுவவிடப்படும்போது வழக்கமான அந்த ஆக்ரோஷத்தையும் கோபத்தையும் காட்டுவதும்தான் உண்மையான விராட் கோலியின் அடையாளம் என்றும், அதை அவர் கடைசிப் போட்டியில் வெளிப்படுத்தியதே ரசிகர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.
