பள்ளிக்கூடப் பொதுத்தேர்வு எழுதும் பதினைந்து வயதில், ஒரு மாநிலத்தின் சீனியர் கிரிக்கெட் அணிக்கே கேப்டனாகப் பொறுப்பேற்று உலக சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில், பீகார் அணியை வழிநடத்தும் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம், ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் கேப்டனான வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை இவர் தன்வசப்படுத்தியுள்ளார். இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் சனிக்கிழமை சௌராஷ்டிரா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்ததன் மூலம் தனது கேப்டன் பயணத்தை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.
இதற்கு முன்பு கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், குரோஷியா நாட்டின் சாக் வுகுசிக் என்பவர் தனது 17 வயது மற்றும் 311 நாட்களில் சைப்ரஸ் அணிக்கு எதிராகக் கேப்டனாகப் பொறுப்பேற்றதே உலக சாதனையாக இருந்தது. அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் தைமூர் அலி 17 வயது 358 நாட்களிலும், லக்ஷ் பர்கானியா மற்றும் பிரான்ஸ் அணியின் நோமன் அம்ஜத் ஆகியோரும் இளம் கேப்டன்களாகப் பட்டியலில் இருந்தனர். ஆனால் இவர்களின் சாதனைகளையெல்லாம் இரண்டு ஆண்டுகள் வித்தியாசத்தில் வெறும் பதினைந்தே வயதில் வைபவ் சூர்யவன்ஷி தகர்த்தெறிந்துள்ளார். பீகார் அணியின் முதல் இரண்டு போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் சூரஜ் காஷ்யப் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வைபவின் அபாரத் திறமையும் முதிர்ச்சியும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனப் பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களமிறங்கிய இந்தப் பதினைந்து வயது சிறுவன், 237.30 என்ற இமாலய ஸ்ட்ரைக் ரேட்டில் 72 சிக்ஸர்களுடன் 776 ரன்களைக் குவித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் தொடரின் மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்ட்ரைக்கர், அதிக சிக்ஸர்கள் மற்றும் ஆரஞ்சு கேப் என ஐந்து முக்கிய விருதுகளைத் தனியாளாக வாரிக் குவித்தார்.
குறிப்பாகக் கடந்த 2023-ல் சுப்மன் கில் மற்றும் 2025-ல் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் தங்களது 23-வது வயதில் படைத்த ஆரஞ்சு கேப் சாதனையை, வெறும் 15 வயதிலேயே முறியடித்து இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளார்.
