இந்தியாவில் இருந்து சீனப் பெருஞ்சுவர், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கவும், வர்த்தக ரீதியாகச் சீனா செல்லவும் திட்டமிடுபவர்களுக்குப் புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
குறிப்பாக, சுற்றுலா விசாவில் சீனா செல்ல விரும்புபவர்களின் சேமிப்பு வங்கிக் கணக்கில், கடந்த ஆறு மாதங்களில் சராசரியாகக் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அப்படி இல்லையென்றால், விண்ணப்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே போடப்பட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கான வங்கி டெபாசிட் சான்றிதழை, வங்கியின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி முதல் விசா விண்ணப்பிக்கும் முறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செயல்பட்டு வந்த விசா சேவை மையங்களுக்குப் பதிலாக, இனி புதுடெல்லியில் உள்ள சீனத் தூதரகமும், மும்பையில் உள்ள துணைத் தூதரகமுமே நேரடியாக விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும்.
இதன்படி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தவர்கள் மும்பையிலும், தமிழ்நாடு உள்ளிட்ட பிற அனைத்து மாநிலத்தவர்களும் புதுடெல்லி தூதரகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
இதற்கு ஆன்லைனில் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு இமெயில் மூலம் ஒப்புதல் வந்த பிறகு, முப்பது நாட்களுக்குள் நேரில் சென்று அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய பழைய பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் சீனா சென்றிருந்தால் அதன் விசா நகல்களை இணைக்க வேண்டும்.
அத்துடன் வெள்ளைப் பின்னணியில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட அளவிலான இரண்டு புகைப்படங்கள் அவசியம். பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்றால் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள அட்டை மற்றும் சம்மதக் கடிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
நூற்று எண்பது நாட்கள் வரை தங்கும் குறுகிய கால விசாக்களுக்கு, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கைரேகைப் பதிவிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டை நேரில் சமர்ப்பித்த அடுத்த நாளிலிருந்து சாதாரண விண்ணப்பங்களுக்கு ஏழு வேலை நாட்களிலும், விரைவு விண்ணப்பங்களுக்கு வெறும் நான்கு வேலை நாட்களிலும் விசா கிடைத்துவிடும். இறுதியாகப் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெறும்போது இதற்கான விசா கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
