செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்ற பயம் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்களிடம் இருந்து வருகிறது.
ஆனால், அந்த அச்சத்தைப் போக்கும் விதமாக, ஏஐ தொழில்நுட்பம் பறிக்கும் வேலைகளை விட அதிகப் புதிய வேலைவாய்ப்புகளையே உருவாக்கும் எனப் பிரபல ஆய்வு நிறுவனமான ‘கார்ட்னர்'(Gartner) தெரிவித்துள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஏஐ காரணமாக சுமார் 89 லட்சம் வேலைகள் பறிபோனாலும், அதே காலகட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 17 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் புதிதாகக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு 2026-ஆம் ஆண்டில் ஏஐ வருகையால் 22 லட்சம் வேலைகள் பறிபோன நிலையில், 16 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், சுமார் 13 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்குவதை நிறுவனங்கள் தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளன. இப்படிப் புதிய பணியிடங்களைத் தள்ளிவைப்பதால், 2030-க்குள் சுமார் 50 லட்சம் பேர் தாமதமாகவே வேலைக்குச் சேரும் சூழல் ஏற்படும்.
தள்ளிவைக்கப்பட்ட வேலைகள் என்பது பறிபோன வேலைகள் கிடையாது, அவை இன்னும் உருவாக்கப்படவில்லை அவ்வளவுதான் என கார்ட்னர் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் ஜான் லவ்லாக் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னணி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஆட்களைக் குறைக்கும் கருவியாகப் பார்க்காமல், தங்களது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்துவதாக மற்றொரு ஆய்வாளரான ஹெலன் பொய்ட்வின் கூறியுள்ளார்.
2030-க்குள் ஏஐ காரணமாக நேரடியாக வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 0.4 முதல் 1.8 சதவீதமாக மட்டுமே இருக்கும். ஆனால், உலகளவில் உள்ள மொத்த ஊழியர்களில் 20 சதவீதம் பேர், அதாவது சுமார் 43 கோடியே 55 லட்சம் ஊழியர்கள், ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களது பணித்திறனை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
துறை வாரியாகப் பார்க்கும்போது, பெரிய தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் 60 லட்சம் வேலைகள் பறிபோனாலும், 64 லட்சம் புதிய வேலைகள் உருவாகவுள்ளன.
அரசு சார்ந்த பொதுத்துறையில் மட்டும் 4 லட்சம் புதிய வேலைகள் உருவாகி, 9 லட்சம் வேலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தொழில்நுட்பத் துறையில் வெறும் 4 லட்சம் வேலைகள் மட்டுமே பறிபோகும் நிலையில், 19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் குவியப்போவதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு அஞ்சாமல், அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதே இந்த ஆய்வின் சுருக்கமாகும்.
