நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூகுள் மீட் அல்லது ஜூம் வீடியோ காலில் அழைத்தால் நாம் எந்தச் சந்தேகமும் இல்லாமல் உடனே அதில் இணைவோம்.
ஆனால், அப்படித் தெரிந்தவர்களின் முகத்தையே திரையில் காட்டி, கடந்த 18 மாதங்களில் சுமார் 400 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் மூவாயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான கிரிப்டோகரன்சியை வடகொரிய ஹேக்கர்கள் கொள்ளையடித்துள்ளதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
‘ஃபேஸ் ஸ்டீலர்’ எனப்படும் இந்த நூதன மோசடியில், ஹேக்கர்கள் முதலில் ஒருவரது சமூக வலைதளக் கணக்கை ஹேக் செய்து, அவரது முகத்தை வெப்கேமரா வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துக் கொள்கிறார்கள்.
பிறகு, பாதிக்கப்பட்ட அந்த நபரின் கணக்கில் இருந்தே அவருடைய நண்பர்களுக்கு ஜூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் அல்லது கூகுள் மீட் போன்ற செயலிகளின் போலி இணையதளங்கள் வழியாக வீடியோ கால் அழைப்பை அனுப்புகிறார்கள்.
நண்பர்தானே அழைக்கிறார் என்று நம்பி வீடியோ காலில் இணையும் நபருக்கு, ஏற்கனவே ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட நண்பரின் வீடியோ திரையில் காட்டப்படும். அதே நேரத்தில், புதிதாக இணைந்தவரின் முகமும் அவருக்குத் தெரியாமலேயே பதிவு செய்யப்படுகிறது.
அடுத்த சில நொடிகளில் வீடியோ காலில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது போலக் காட்டி, அதைச் சரி செய்ய அங்கிருக்கும் ஒரு லிங்கை கிளிக் செய்யும்படி கேட்கப்படும்.
அதை உண்மையென நம்பி கிளிக் செய்த மறுநொடியே, அவரது கம்ப்யூட்டரும் சமூக வலைதளக் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுப் பணம் திருடப்படுவதோடு, இவரது முகத்தைப் பயன்படுத்தி இவருடைய நண்பர்களையும் அடுத்தடுத்து இதே பாணியில் ஏமாற்றுகிறார்கள்.
இப்படி ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட வெப்கேம் வீடியோக்களை எஃப்.பி.ஐ அதிகாரிகள் இதுவரை கைப்பற்றியுள்ளனர். மேலும், கிரிப்டோ துறையில் உள்ள பிரபலங்களின் முகங்களை ஏஐ டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி, நேரலையில் வீடியோ காலில் பேசுவது போலவும் ஹேக்கர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் பைனான்ஸ் நிறுவனத்தில் 6.3 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடித்த கும்பல் இல்லாமல், சஃபையர் ஸ்லீட் (Sapphire Sleet) எனப்படும் மற்றொரு வடகொரிய ஹேக்கர் கும்பலே இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர, நன்கு அறிமுகமான முகங்களைக் கூட வீடியோ காலில் நம்ப முடியாத சூழல் உருவாகியிருப்பது இணையப் பயன்பாட்டாளர்களுக்குப் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
