உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் வெள்ளிக்கிழமை காலை திடீரென முடங்கியதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பயனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குறிப்பாக, Microsoft 365, Outlook, Teams ஆகிய சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் Outlook சேவையில் அதிகளவிலான புகார்கள் பதிவாகின. Downdetector இணையதளத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சேவை முடக்கத்தால் தனிப்பட்ட பயனர்கள் மட்டுமின்றி, அலுவலகப் பணிகளுக்காக மைக்ரோசாஃப்ட் சேவைகளை நம்பியிருக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன.
மேலும், OpenAI மற்றும் Anthropic போன்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் சில இணைப்புச் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
பல சர்வர்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இதனைச் சரிசெய்ய பொறியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சர்வர்களில் இருந்த பயனர்களின் இணைப்புகள் மாற்று சர்வர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. புதிய மென்பொருள் புதுப்பிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், மைக்ரோசாஃப்டின் சைபர் பாதுகாப்புச் சேவையான Microsoft Defender XDR-லும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதத்திலும் Microsoft 365 சேவைகள் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வர்கள் செயலிழந்ததற்கான முழுமையான காரணம் மற்றும் சேவைகள் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது குறித்து பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
