அமெரிக்காவில் நடைபெற்று வரும் பரபரப்பான இடைக்காலத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு மத்தியில், சர்வதேச நாணயச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவிற்குத் திடீரென உச்சத்திற்குப் பாய்ந்துள்ளது.
அமெரிக்காவின் வலுவான பொருளாதாரப் புள்ளிவிவரங்கள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் அந்நாட்டுக் கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றால், நடப்பு ஆண்டின் உச்சபட்ச மதிப்பை டாலர் நெருங்கியுள்ளது.
மறுபுறம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹94.70 – ₹94.80 அளவில் என்ற நிலையில் தத்தளித்து வருவது இந்தியச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டாலரின் இந்த அசுரப் பாய்ச்சல் தங்கம் விலையிலும் சாமானிய மக்களின் பாக்கெட்டிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. பொருளாதார விதிகளின்படி, அமெரிக்க டாலரும் கடன் பத்திர வருவாயும் உயரும்போது, உலக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் தங்கத்திலிருந்து எடுத்து அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள்; இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறையத் தொடங்கும்.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இங்கேதான் ஒரு பெரிய சிக்கல் ஒளிந்திருக்கிறது. உலக சந்தையில் தங்கம் விலை சற்றே குறைந்தாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாக இருப்பதால், வெளிநாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவு பல மடங்கு அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கிடைக்கும் விலைக்குறைப்பு பலன் இந்திய நகை வாங்குபவர்களுக்கு முழுமையாகக் கிடைக்காமல், உள்ளூர் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை விட, தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் விவகாரத்திலும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திலும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகளே தங்கம் மற்றும் டாலரின் அடுத்தகட்டத் திசையைத் தீர்மானிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தேர்தலுக்குப் பின் ஈரானுடன் சமரசம் ஏற்பட்டால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை கணிசமாகக் குறையும்; மாறாக மீண்டும் தாக்குதல் தொடங்கினால் தங்கம் விலை யாரும் தொட முடியாத உச்சத்திற்குச் செல்லும்.
அதேபோல் டாலர் மதிப்பு உயர்வதால் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் திருமண சீசனுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மக்கள், அமெரிக்கத் தேர்தலுக்குப் பிந்தைய இந்தச் சர்வதேச மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து நிதானமாக முடிவெடுப்பதே புத்திசாலித்தனமான செயலாகும்.
