காலம் காலமாக தங்கத்தை நகைகளாக வாங்கி வந்த இந்தியர்கள் தற்போது தங்களது வாங்கும் முறையை மாற்றி வருகின்றனர். தங்க நகைகளுக்குப் பதிலாக தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
நடப்பாண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் தங்கத் தேவை அளவின் அடிப்படையில் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. இருப்பினும், தங்கம் வாங்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நகைகளைவிட தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தக் காலாண்டில் மட்டும் ரூ.81,890 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் தங்கம் வாங்குவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. செப்டம்பர் காலாண்டில் சீனாவின் தங்கத் தேவை 80 டன்னாகவும், இந்தியாவின் தேவை 55 டன்னாகவும் பதிவாகியுள்ளது. சர்வதேச அளவில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவையில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 21 சதவீதமாக உள்ளது.
ஏன் தங்க நாணயங்களை வாங்குகிறார்கள்?
தங்க நகைகளை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. ஆனால் மறுவிற்பனையின்போது இந்தத் தொகை கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களை வாங்கும்போது கூடுதல் செலவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றன.
மேலும், எதிர்கால முதலீடு, குழந்தைகளின் திருமணம் மற்றும் விருப்பமான டிசைனில் நகைகளை வாங்கிக்கொள்ளும் வசதி போன்ற காரணங்களாலும் மக்கள் தங்கக் கட்டிகள், நாணயங்களைத் தேர்வு செய்கின்றனர்.
எனவே, தங்கம் தற்போது ஆபரணமாக மட்டுமின்றி முதலீட்டுக்கான ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
