இந்தியாவில் நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்கும் தொழில்களுக்கும் எப்போதும் கைகொடுப்பது நகைக் கடன்கள்தான். ஆனால், இப்போது இந்திய வங்கிகளில் தங்க நகைக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் நகைக்கடன் சுமார் எண்பத்தி மூன்று சதவீதம் உயர்ந்து, ஐந்து லட்சத்து எழுபத்தேழாயிரம் கோடி ரூபாய் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளது.
அதாவது, கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் கூடுதலாக மூன்று லட்சம் கோடி ரூபாய் தங்கத்தின் மீது கடனாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்கம் விலை உச்சத்திலிருந்து மெல்ல சரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், ஒருவேளை தங்கம் விலை மேலும் பதினைந்து சதவீதம் குறைந்தால் என்ன நடக்கும் என்ற மிகப்பெரிய எச்சரிக்கையை நிதித்துறை வல்லுநர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தங்கத்தின் விலை திடீரென பதினைந்து சதவீதம் சரியும்போது, வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் நாம் அடமானம் வைத்த நகைகளின் சந்தை மதிப்பு கணிசமாகக் குறையும்.
பொதுவாக ஒரு நகையின் மதிப்பில் அறுபது முதல் எழுபது சதவீதம் வரை மட்டுமே வங்கிகள் கடனாகத் தரும். இதை எல்.டி.வி எனப்படும் லோன்-டு-வேல்யூ விகிதம் என்பார்கள்.
தங்கம் விலை சரியும்போது, வாடிக்கையாளர் வாங்கிய கடன் அப்படியே இருக்கும்; ஆனால் அடமானம் வைக்கப்பட்ட நகையின் மதிப்பு குறைந்துவிடும் என்பதால், இந்த கடன் விகிதம் எழுபத்தாறு சதவீதத்திற்கும் மேலாக எகிறிவிடும்.
இதனால் முத்தூட், மணப்புரம், ஐஐஎஃப்எல் போன்ற நிதி நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் தங்களது பாதுகாப்பு வளையம் சுருங்கி, வாராக்கடன் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கும்.
விலை குறைந்த உடனேயே வாடிக்கையாளர்கள் கூடுதல் நகையை வைக்க வேண்டும் என்றோ, பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றோ வங்கிகள் கட்டாயப்படுத்தாது என்றாலும், பழைய நகையின் மீது கூடுதலாக டாப்-அப் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும், புதிதாக அடமானம் வைப்பவர்களுக்கும் இனி குறைவான தொகையே கடனாகக் கிடைக்கும்.
அதோடு, நிதி நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியால் அவர்களது லாப வரம்பும் குறையத் தொடங்கியுள்ளது.
தங்கத்தை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய கடன் சாம்ராஜ்யம் உருவாகியிருக்கும் வேளையில், தங்கம் விலையில் வரப்போகும் அடுத்தகட்ட மாற்றங்கள் சாதாரண பொதுமக்களையும் நிதி நிறுவனங்களையும் எத்தகைய நெருக்கடியில் தள்ளப்போகிறது என்பதை நாம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது.
