உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், ஒரே நாளில் மிகப்பெரிய பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆல்பபெட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட காலாண்டு நிதி அறிக்கையில், அதன் நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 25 சதவீதம் குறைந்து 26.22 பில்லியன் அமெரிக்க டாலராகச் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் 34.98 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 26.17 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆல்பபெட் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.
இதன்படி, 2026ஆம் ஆண்டில் மட்டும் 195 பில்லியன் முதல் 205 பில்லியன் டாலர் வரை மூலதனச் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டிலும் இந்தச் செலவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கூகுளின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பர வருவாயும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. இதுவும் முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, பங்குச்சந்தை தொடங்கியதும் முதலீட்டாளர்கள் ஆல்பபெட் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதனால் ஒரே நாளில் நிறுவனத்தின் பங்குகள் 12 முதல் 13 சதவீதம் வரை சரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துள்ளது. இந்திய மதிப்பில் இது 40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
இந்தச் சரிவு, பங்குச்சந்தை வரலாற்றின் மிகப்பெரிய ஒருநாள் சந்தை மதிப்பு இழப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் இது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
