இந்திய ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சிக்கல்? ‘Microsoft’ எடுத்த அதிரடி முடிவு!

சர்வதேச தொழில்நுட்ப துறையில் தற்போது மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் அறுபதாயிரம் பேருக்கு ‘விருப்ப ஓய்வு’ எனப்படும் ‘வாலன்டரி எக்சிட் ஆஃபரை’ அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்டவும், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளைத் தொடர்ந்து, இந்த அதிரடித் திட்டம் இந்தியாவிலும் அமல்படுத்தப்பட உள்ளது, இங்குள்ள ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ், நிறுவனத்தில் லெவல் எழுபது மற்றும் அதற்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தாமாகவே முன்வந்து பணிகளிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏஐ எக்ஸ்பீரியன்ஸ், கோ-பைலட், நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் எக்ஸ்பாக்ஸ் போன்ற பிரிவுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மார்க்கெட்டிங் மற்றும் செக்யூரிட்டி பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருப்ப ஓய்வைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு, சிறப்பான நிதி உதவியும், எதிர்கால வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக அமெரிக்காவில் இதேபோன்று விருப்ப ஓய்வு அறிவிக்கப்பட்டபோது, ஊழியர்களின் பணிக்காலத்தைப் பொறுத்து எட்டு முதல் முப்பத்தி ஒன்பது வாரங்கள் வரையிலான அடிப்படைச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

அதே நடைமுறை இந்தியாவிலும் பின்பற்றப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஏற்கனவே எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேரை அதிரடியாகப் பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது ஏஐ துறையின் அசுர வளர்ச்சிக்காக இந்த புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.

எந்திரங்களை உருவாக்குவதற்காக மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவது, உலகளாவிய ஐடி துறையில் இனி என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News