மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இந்த வார இறுதிக்குள் ஈரான் மீது ஒரு மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கிக்கான அமெரிக்கத் தூதர் டாம் பராக் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடக்குமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக நடக்கும்” என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் மாபெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல மாதங்களாக ஈரானுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருப்பதாகவும், ஆனால் ஈரான் தரப்பிலிருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் வராததால், மாற்று நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் தூதர் டாம் பராக் கூறினார்.
இருப்பினும், தனது தூதரின் இந்த அதிரடியான கருத்து குறித்து ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்பிற்கு எந்த பதிலும் சொல்லத் தெரியவில்லை.
“எனது தூதரா அப்படிச் சொன்னார்? ஒருவேளை அவர் சக்திவாய்ந்த மனிதராக இருக்கலாம். ஆனால், அவர் சொன்னது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என மிகவும் மழுப்பலாக அவர் பதிலளித்தார்.
இதற்கிடையே, இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், எப்படியாவது வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக ஈரான் அரசை முழுமையாக வீழ்த்துவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து சபதம் செய்து வருகிறார். ஆனால், இதற்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு கருத்தை அமெரிக்கத் தூதர் டாம் பராக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நோக்கம் ஈரானில் ஆட்சியை கவிழ்ப்பது அல்ல என்றும், உலக நாடுகளையும் வளைகுடா நாடுகளையும் ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஆட்சியை வீழ்த்தினால் அதற்குப் பிறகு நடக்கும் உள்நாட்டுப் போர் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்கா அதில் நாட்டம் காட்டவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
