சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (அக். 23) கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்சென்னையில் இருந்து மேகங்கள் நகருக்குள் நகர்ந்து வருவதால், கடலோரப் பகுதிகளில் தொடங்கும் மழை சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவும் என தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 24, 25, 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மழை பெய்ய சாதகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் உள்மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கடலூர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 31–32 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

இதற்கிடையே, அக்டோபர் 23 முதல் 26 வரை தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

Latest News