மரணத்திற்குப் பிறகு மறுபிறப்பு என்பது மனிதர்களுக்குப் பொருந்துமோ இல்லையோ, விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களுக்குப் பொருந்தும் என்பதை விஞ்ஞானிகள் தற்போது மிக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
பொதுவாக ஒரு நட்சத்திரம் அழிந்து போனால், அதைச் சுற்றியுள்ள கோள்களும் அழிந்துவிடும் என்பதே இதுவரை இருந்த அறிவியல் புரிதல். ஆனால், செத்துப்போன ஒரு நட்சத்திரத்திலிருந்து ஒரு புதிய கிரகம் உருவாகியிருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது.
HS 0209+0832 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரத்தை (White Dwarf) ஆய்வு செய்தபோதுதான் இந்த வியத்தகு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சம் ‘நையோபியம்’ (Niobium) என்ற தனிமம் ஆகும். 1999-ஆம் ஆண்டு ஹப்பிள் தொலைநோக்கி சேகரித்த பழைய தரவுகளை, தற்போதைய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு லண்டன் வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி நையோபியம் தனிமம் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர். பொதுவாக இரும்புக்கும் மேலான கனமான தனிமங்கள், ஒரு நட்சத்திரம் அழியும் தருவாயில்தான் அதன் உட்பகுதியில் உருவாகும். இந்தத் தனிமங்கள் அந்த நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கிரகமாக உருவெடுத்திருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
நமது பூமியும், சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களும் ‘முதல் தலைமுறை’ கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை சூரியன் பிறந்தபோதே அதனுடன் சேர்ந்து உருவானவை.
ஆனால், இப்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகம் ஒரு நட்சத்திரம் இறந்து, அதன் வெளிப்பகுதிகள் சிதறிய பிறகு உருவானதால் இது ‘இரண்டாவது தலைமுறை’ கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
வியாழன் கிரகத்தைப் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோளாக இருக்கும் இந்த கிரகம், தனது தாய் நட்சத்திரத்தை வெறும் 60 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலேயே சுற்றி வருகிறது. இது சூரியனுக்கும் புதனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட மிக மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாகத் தனது நட்சத்திரத்தைச் சுற்றி வரும் இந்த கிரகம், அந்த நட்சத்திரத்தின் கடும் வெப்பத்தால் தனது வளிமண்டலத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. இதன் காரணமாக அந்த கிரகத்தைச் சுற்றி ஒரு வால் நட்சத்திரத்தைப் போன்ற நீண்ட வால் பகுதி உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நாசாவின் டெஸ் (TESS) செயற்கைக்கோள் மூலம் நான்கு மாதங்களாக அந்த நட்சத்திரத்தை ஆய்வு செய்தபோது, அதன் பிரகாசத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த கிரகம் இருப்பதை உறுதி செய்துள்ளன.
ஒரு நட்சத்திரம் வாழ்ந்து முடிந்த பிறகு கூட, அங்கிருந்து ஒரு புதிய உலகம் பிறக்க முடியும் என்ற இந்த உண்மை, கோள்களின் உருவாக்கம் குறித்த மனிதர்களின் பார்வையை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
