மனித வரலாற்றிலேயே இது வரை நடக்காத ‘சம்பவம்’! பூமியைத் நோக்கி வந்த ‘காஸ்மிக் கதிர்வீச்சு’!

விண்வெளியின் ஆழத்திலிருந்து வந்த ஒரு மர்மமான ரேடியோ சிக்னல் இப்போது உலக விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட்’ (Fast Radio Burst – FRB) எனப்படும் அதிவேக ஆற்றல் கதிர்வீச்சு ஒன்று, சுமார் 1,000 கோடி ஆண்டுகளாகப் பயணம் செய்து நமது பூமியை வந்தடைந்துள்ளது. இதுவே இதுவரை மனித குலத்தால் பதிவு செய்யப்பட்ட மிகத் தொலைவான ரேடியோ சிக்னல் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு இதுபோன்ற கதிர்வீச்சுகள் முதன்முதலாகக் கண்டறியப்பட்டபோது, இது வேற்றுகிரகவாசிகளின் (Aliens) தொழில்நுட்பமாக இருக்குமோ என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன. ஆனால் இப்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன், இந்தக் குறிப்பிட்ட சிக்னல் குறித்த பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துள்ளன.

‘FRB 20240304B’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கதிர்வீச்சை முதன்முதலில் ‘மீர்காட்’ (MeerKAT) என்ற தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த சிக்னல் எங்கிருந்து வருகிறது என்பதைத் துல்லியமாக அறிய, உலகின் அதிநவீன விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் (James Webb Space Telescope) பயன்படுத்தப்பட்டது. பிரபஞ்சம் தோன்றி சுமார் 300 கோடி ஆண்டுகளே ஆன மிகத் தொடக்கக் காலகட்டத்தில் உருவான ஒரு சிறிய ‘குள்ள கேலக்ஸியில்’ (Dwarf Galaxy) இருந்துதான் இந்த சிக்னல் வந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த கேலக்ஸியில் அதிக அளவில் நட்சத்திரங்கள் மிக வேகமாக உருவாகிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வளவு பிரம்மாண்டமான ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தக் கதிர்வீச்சுகள் எப்படி உருவாகின்றன என்பது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக்கொள்வதாலோ, அல்லது ‘மேக்னடார்’ (Magnetar) எனப்படும் அதிக காந்தப்புலம் கொண்ட நட்சத்திரங்களில் ஏற்படும் நடுக்கத்தாலோ இது உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைமை ஆசிரியரான மனிஷா காலேப் கூறுகையில், “இதனை உருவாக்குவது எது என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், இவ்வளவு தொலைவிலிருந்து ஒரு சிக்னல் வருவது எங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரேடியோ சிக்னலை விஞ்ஞானிகள் ஒரு ‘காஸ்மிக் டார்ச்லைட்’ (Cosmic Flashlight) என்றே அழைக்கிறார்கள். ஏனெனில், இது கடந்து வந்த 1,000 கோடி ஆண்டுகாலப் பாதையில் உள்ள கண்ணுக்குத் தெரியாத பல விண்வெளிப் பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளின் தடயங்களை இது தன்னுள்ளே சுமந்து வந்துள்ளது. பிரபஞ்சத்தின் ஆரம்பகால வரலாற்றைப் புரிந்துகொள்ள இது ஒரு மிகச் சிறந்த கருவியாகச் செயல்படும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சேவியர் ப்ரோசாஸ்கா தெரிவித்துள்ளார். விண்வெளி என்பது இன்னமும் விடைதெரியாத பல மர்மங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News