‘ரோஹித், கோலி மட்டும் போதாது!’… இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ‘கைஃப்’!

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒருநாள் உலகக்கோப்பை வரும் 2027-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்திய ரசிகர்கள் இப்போதே இந்தத் தொடருக்காகக் காத்திருக்கும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முகமது கைஃப் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையையும், ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

2027 உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப்போவது பேட்டர்கள் அல்ல, பந்துவீச்சாளர்கள் தான் என்பதுதான் கைஃப்பின் அந்த அதிரடி கணிப்பு.

வழக்கமாகத் தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படும். ஆனால், தற்போதைய நிலவரப்படி அங்குள்ள ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக மாறிவிட்டதாகக் கைஃப் சுட்டிக்காட்டுகிறார்.

“தென் ஆப்பிரிக்காவில் பேட்டர்கள் ரன் மழை பொழிவார்கள், அப்படிப்பட்ட சூழலில் எந்த அணியிடம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்களோ, அவர்களே வெற்றியைத் தீர்மானிப்பார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பீல்டிங் துறையிலும் இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அனைவரது கவனமும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது இருந்தாலும், அவர்கள் இருவர் மட்டுமே கோப்பையை வென்று கொடுத்துவிட முடியாது என்பது கைஃப்பின் வாதம்.

2027-ல் ரோஹித்திற்கு 40 வயதும், கோலிக்கு 39 வயதும் ஆகியிருக்கும் என்பதால், அவர்களின் பங்களிப்போடு மற்ற இளம் வீரர்களின் கூட்டு முயற்சியும் மிக அவசியம்.

இதற்கு உதாரணமாக 2003 உலகக்கோப்பையை அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடினாலும், யுவராஜ் சிங், ராகுல் டிராவிட் மற்றும் பந்துவீச்சாளர்களின் கூட்டு உழைப்புதான் கங்குலி தலைமையிலான இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது என்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த மெகா தொடர் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கேப் டவுன் மற்றும் ஜோகன்னஸ்பர்க் போன்ற மைதானங்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடக்கவுள்ளன.

ரோஹித் – கோலி ஜோடியின் கடைசி உலகக்கோப்பையாக இது இருக்கக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த இந்திய அணியும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் மட்டுமே 2011-க்குப் பிறகு மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பையை முத்தமிட முடியும். முகமது கைஃப்பின் இந்த ஆலோசனையை பிசிசிஐ கவனத்தில் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News