மிகப்பெரிய சம்பவம் செய்த ‘வடகொரியா’! அடுத்தடுத்து பாய்ந்த ‘ஏவுகணைகள்’!

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் மேகம் சூழ்ந்துள்ளது. தனது எல்லையில் ஒரு மில்லிமீட்டர் அளவிலான அத்துமீறலைக் கூட சகித்துக் கொள்ள மாட்டோம் என எச்சரித்த வடகொரியா, தற்போது அடுத்தடுத்து பல ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலையில் வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், சுமார் 900 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் விழுந்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பரபரப்பான பின்னணி ஒளிந்திருக்கிறது. அண்மையில் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் மூன்று தென்கொரிய வீரர்கள் காயமடைந்தனர்.

இதற்கு வடகொரியா தான் காரணம் எனத் தென்கொரியா குற்றம் சாட்டிய நிலையில், அதை வடகொரியா திட்டவட்டமாக மறுத்ததோடு, இது ஒரு புனையப்பட்ட பொய் என்றும் கூறியிருந்தது.

இந்தச் சூழலில், எல்லையில் தென்கொரியா மேற்கொண்ட கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே கிம் ஜாங் உன் இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi), கடல் மற்றும் வான்வழியில் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

தென்கொரியாவோ இந்தச் சோதனைகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறுவதாகக் கூறி, அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி நிலைமையை ஆய்வு செய்துள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இரு நாடுகளுமே தற்போது அதிநவீன ‘ஹைப்பர்சோனிக்’ தொழில்நுட்பத்தைக் காட்டி மிரட்டி வருகின்றன.

வடகொரியா ஏற்கனவே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைச் சோதித்துள்ள நிலையில், தென்கொரியாவும் பதிலுக்கு ‘ஹைப்பர்சோனிக் கிளைடு வெஹிக்கிள்’ (HGV) எனப்படும் இடைமறிக்கவே முடியாத அதிவேக ஆயுதத்தைச் சோதித்து தனது பலத்தை நிரூபித்துள்ளது.

அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியாவுக்கும், அமெரிக்க ஆதரவு கொண்ட தென்கொரியாவுக்கும் இடையிலான இந்த ராணுவப் போட்டி, ஆசியப் பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தென்கொரிய ராணுவம் தனது எல்லைகளில் பாதுகாப்பை உச்சகட்ட விழிப்புணர்வுடன் பலப்படுத்தியுள்ளது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News