தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். தாராபுரம் தொகுதியில் ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார்.
தொடர்ந்து அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகித்து வருகிறார். இதனால் தாராபுரம் தொகுதியில் போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.
இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்பு அதிமுக தொண்டர்கள் வணங்கி வழிபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் வெளியாகும் நிலையில், இரு தொகுதிகளிலும் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
