தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 29ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கும், செப்டம்பர் 30ஆம் தேதி நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை அதிகபட்சமாக 36-37°C, குறைந்தபட்சமாக 27-28°C இருக்கும்.
மேலும், வடக்கு அந்தமான் கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
