தங்க நகை பிரியர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்! மார்க்கெட்டுக்கு வந்த ‘5D Hard Gold’ ஸ்பெஷல் என்ன?

தங்கம் விலை விண்ணை முட்டி வரும் இந்த நேரத்தில், மிகக் குறைந்த எடையில், பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமான தங்க நகைகளை உங்களால் வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்? ஆம், இந்திய நகை சந்தையைத் தற்போது தலைகீழாக மாற்றி வருகிறது சீனாவின் ‘5D ஹார்டு கோல்டு’ தொழில்நுட்பம்!

இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், நடுத்தர மக்கள் அதிக எடையில் பெரிய நகைகளை வாங்குவது பெரும் கனவாகிவிட்டது.

இதற்கு மாற்றாகப் பலரும் வெள்ளி நகைகளை நோக்கித் திரும்பி வரும் வேளையில், இந்திய நகைக்கடைகளில் ‘5டி ஹார்டு கோல்டு’ (5D Hard Gold) எனப்படும் புதிய வகை தங்க நகைகள் தற்போது அறிமுகமாகியுள்ளன.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலக்ட்ரோஃபார்மிங் (Electroforming) தொழில்நுட்பத்தின் மூலம், பிரம்மாண்டமான டிசைன்களை மிகக் குறைந்த தங்கத்தைப் பயன்படுத்தி உருவாக்க முடியும்.

பொதுவாகக் குறைந்த எடையில் செய்யப்படும் நகைகள் எளிதில் வளைந்துவிடும் அல்லது நசுங்கிவிடும் என்ற ஒரு குறை மக்களிடம் உள்ளது. ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் மெழுகால் செய்யப்பட்ட ஒரு அச்சின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி, தங்கத் துகள்களைப் படிய வைத்து நகைகளை உருவாக்குகிறார்கள்.

பின்னர் அதனைச் சூடாக்கி உள்ளே இருக்கும் மெழுகை மட்டும் உருக்கி வெளியேற்றி விடுவார்கள். இதனால், இந்த நகைகள் பார்ப்பதற்கு மிகப் பெரியதாகவும், வழக்கமான குறைந்த எடை நகைகளை விட நான்கு மடங்கு அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.

சொல்லப்போனால், சாதாரண நகைகளை விட 60 சதவீதம் குறைவான தங்கத்தை வைத்து இதை உருவாக்கிவிட முடியும்.

இருபத்தி நான்கு கேரட் சுத்தமான தங்கத்தில் கூட, இந்த முறையில் உறுதியான நகைகளைச் செய்ய முடியும் என்பதால், இந்திய நகைக்கடைக்காரர்கள் பலரும் இந்த இயந்திரங்களை அதிக அளவில் வாங்கியுள்ளனர்.

ஆனால், இதில் உள்ள ஒரே ஒரு மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், இந்த 5D நகைகள் ஒருவேளை உடைந்தாலோ அல்லது பழுதானாலோ, நமது ஊர் ஆசாரிகளிடம் கொடுத்து அவ்வளவு எளிதாகப் பற்றவைத்துச் சரிசெய்ய முடியாது. பழுதானால் அதனை உருக்கித்தான் ஆகவேண்டும்.

குறைவான எடை, பிரம்மாண்டமான தோற்றம் எனப் பல கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்ட இந்த 5D தங்க நகைகள் புது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related News

Latest News