ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யா தனது ராணுவப் பலத்தை அதிகரிப்பதற்காக உலக நாடுகளுக்கே தெரியாமல் ஒரு மிகப்பெரிய தகிடுதத்தத்தை அரங்கேற்றி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு எதிரான இந்தப் போரில் ரஷ்யாவிற்காகப் போராட இந்தியா உட்பட சுமார் நாற்பத்தி ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை ரஷ்யா சட்டவிரோதமாகப் பணியமர்த்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக இந்தியா, நேபாளம், இலங்கை, கியூபா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை, அதிக சம்பளம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் ரஷ்யா மூளைச்சலவை செய்து ஏமாற்றியுள்ளது.
செக்யூரிட்டி, டிரைவர் மற்றும் கட்டிடப் பணிகள் எனக்கூறி அங்கு அழைத்துச் செல்லப்படும் அந்த இளைஞர்களிடம் இருந்து, அவர்களது செல்போன் மற்றும் பாஸ்போர்ட்டை ரஷ்ய ராணுவம் கட்டாயமாகப் பறிமுதல் செய்கிறது.
பின்னர் அவர்களுக்கு எவ்வித முறையான பயிற்சியும் இன்றி வலுக்கட்டாயமாக ராணுவ உடைகளை அணிவித்து, நேராக உக்ரைன் போர்க்களத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என ஜெலன்ஸ்கி மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நேரடியாக ஐநா சபையிலேயே அந்த நாற்பத்தி ஏழு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஒரு மாபெரும் எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். “ரஷ்யா உங்களது நாட்டு மக்களைப் போர்க்களத்தில் எப்படிப் பயன்படுத்துகிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், தயவுசெய்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொள்ளுங்கள்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, ரஷ்யப் படைகளில் இணைந்த தங்கள் நாட்டு இளைஞர்கள் சுமார் அறுபத்தி இரண்டு பேர் போரில் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பதினைந்து பேரைக் காணவில்லை என்றும் கானா நாடு சமீபத்தில் ரஷ்யா மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்த மாபெரும் ஆள் கடத்தல் மோசடியை, அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளன.
