செவ்வாய் கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் வாழ்ந்ததா என்ற மிகப்பெரிய கேள்விக்கு விடை தேடி, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பி வைத்த ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் தற்போது ஒரு மாபெரும் ரகசியத்தைக் கண்டுபிடித்து உலக விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘ஜெசெரோ’ என்ற ஒரு பிரம்மாண்டமான பள்ளத்தாக்கில் இந்த ரோவர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. ஒருகாலத்தில் இந்த இடம் ஒரு மாபெரும் ஏரியாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அங்குள்ள பாறைகளைத் தனது அதிநவீன லேசர் கேமராக்கள் மூலம் ரோவர் ஆய்வு செய்தபோது, அந்தப் பாறைகள் குறைந்தபட்சம் மூன்று முறை தண்ணீரோடு கலந்து தங்களது வேதியியல் தன்மையை மாற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த இடத்தில் வெறும் சாதாரண படிவுப் பாறைகள் மட்டுமே இருக்கும் என நினைத்த விஞ்ஞானிகளுக்கு, பூமிக்கடியில் எரிமலைக் குழம்புகளால் உருவாகும் மிக உறுதியான பாறைகள் அங்கு இருந்தது பெரும் வியப்பை அளித்தது.
இந்தப் பாறைகளில் உள்ள படிகங்களில் நடந்த வேதியியல் மாற்றங்களை வைத்து, அங்கு மூன்று முறை தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை ரோவர் கண்டுபிடித்துள்ளது.
முதலில், பூமிக்கடியில் இருந்த கார்பன்-டை-ஆக்சைடு கலந்த நிலத்தடி நீர் இந்தப் பாறைகளோடு வினைபுரிந்துள்ளது. இரண்டாவது முறையாக, அந்தப் பள்ளத்தாக்கில் ஒரு மிகப்பெரிய ஏரி உருவானபோது அங்குள்ள பாறைகள் தண்ணீரோடு கலந்ததற்கான மிக முக்கியத் தடயங்கள் அதில் பதிவாகியுள்ளன.
இறுதியாக மூன்றாவது முறைதான் நாசாவையே அதிரவைத்துள்ளது. அதாவது, எரிமலைப் பாறைகளுக்கு இடையே மிக அதிக வெப்பநிலையைக் கொண்ட சுடுநீர், அங்குள்ள கனிமங்களோடு வினைபுரிந்ததற்கான ஆதாரங்களும் அந்தப் பாறைகளில் கிடைத்துள்ளன.
இந்த மூன்று நீர் சுழற்சிகளும் எந்தெந்த காலகட்டங்களில் நிகழ்ந்தது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் காலநிலை நாம் நினைத்ததை விட மிகவும் ஆழமானதும், மர்மங்கள் நிறைந்ததும் ஆகும் என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.
இப்படித் தண்ணீரோடு பாறைகள் தொடர்ந்து வினைபுரியும்போது அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகும். அந்த வாயு, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வாழ்வதற்கு ஒரு மிகப்பெரிய உணவு மற்றும் ஆற்றல் மூலமாகச் செயல்படும்.
எனவே, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நிச்சயம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
