ஐரோப்பாவை அதிரவைக்கும் ரஷ்ய ட்ரோன் அச்சுறுத்தல்: CIA ரகசிய எச்சரிக்கையா?

ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் உச்சக்கட்ட பீதியில் ஆழ்த்தும் வகையிலான ஒரு பகீர் உளவுத்துறை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகளின் மீது, ரஷ்யா மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீதான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் மீதான ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் திட்டம் மிகவும் தந்திரமானது என கூறப்படுகிறது. ராணுவக் கப்பல்களுக்குப் பதிலாக, மத்திய தரைக்கடல் பகுதியில் பயணிக்கும் சாதாரண வணிகக் கப்பல்களை ட்ரோன் ஏவுதளங்களாகப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ரஷ்யாவால் மிக எளிதாக மறுக்க முடியும். இதற்காக, தாங்களே சொந்தமாகத் தயாரித்த ‘கெர்பெரா’ (Gerbera) எனப்படும் நவீன சூசைட் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் அறுநூறு கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய இந்த அதிநவீன ட்ரோன்கள், நான்கு முதல் ஐந்து கிலோ வரையிலான வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கடற்கரை ஓரங்களில் உள்ள முக்கிய துறைமுகங்கள், எரிசக்தி ஆலைகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்களை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என சி.ஐ.ஏ எச்சரித்துள்ளது.

இந்த நாடுகள் ஐரோப்பாவின் மிக முக்கிய வர்த்தகப் பாதைகளைக் கொண்டுள்ளதால், இவற்றை முடக்குவதன் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க முடியும் என ரஷ்யா கணக்குப்போடுகிறது.

இந்த ரகசிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் தங்களது ராணுவ தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிரடியாகப் பலப்படுத்தியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில், சி.ஐ.ஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் சமீபத்தில் ரஷ்யாவிற்கு ஒரு ரகசியப் பயணம் மேற்கொண்டார்.

உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்தான், தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான இந்த ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தை இந்தத் தகவல் மேலும் அதிகரித்துள்ளது.

Related News

Latest News