தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு வகையான காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உண்ணிக்காய்ச்சல் போன்ற நோய்களும் பரவி வருகின்றன.
உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் உண்ணிக்காய்ச்சல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 17,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி துறை இணைந்து வீடு வீடாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் அல்லது உடல்நலப் பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
