10 கோடி ரூபாய் பரிசு… ஒரு இனோவா கார்..! தாராபுரம் இடைத்தேர்தலில் புது ட்விஸ்ட்!!

தாராபுரம் இடைத்தேர்தல் களம் இப்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமான அரசியல் மோதல்களுக்கு இடையே, “தமிழ்நாடு கள் இயக்கம்” விடுத்துள்ள ஒரு அதிரடி சவால் ஒட்டுமொத்த தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது. கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு ஒரு நேரடி சவாலை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகக் கருதப்படும் கீழ்பவானி அணை விவகாரத்தில், எந்தவித விதிமுறை மீறலும் நடக்கவில்லை என இவர்கள் நிரூபித்துக் காட்டினால், அவர்களுக்குப் பத்து கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், தற்போது பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சுவாரசியமான சவாலை நல்லசாமி முன்வைத்துள்ளார். தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நியாயமானதுதான் என்று எந்த ஒரு எம்.எல்.ஏ-வாவது ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினால், அவர்களுக்குப் புதிய “இனோவா கார்” பரிசாக வழங்கப்படும் என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

நீதியரசர் கோகுல் தாஸ் பரிந்துரையின்படி கள் மீதான தடையை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தி, தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் கள் இயக்கம் சார்பில் தனி வேட்பாளரை நிறுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காவிரி நீர் உரிமைப் பிரச்சினை குறித்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நல்லசாமி, கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத சூழலில், தமிழக அரசு ஏன் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

பவானி ஆற்றங்கரையில் அரசின் அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகள் குறித்தும் அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். காவிரி உரிமை மற்றும் கள் தடை நீக்கம் ஆகியவற்றை மையப்படுத்தியே தங்களது தேர்தல் பரப்புரை அமையும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாக, வாக்காளர்கள் சினிமா கவர்ச்சியில் மயங்கி நடிகர்களுக்கு ஓட்டுப் போட்டால் நாடு நாசமாகிவிடும் என்று எச்சரித்துள்ள அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா அல்லது செம்மறி ஆடுகளாக இருக்கிறார்களா என்பதைச் சோதிக்கவே இந்தத் தேர்தலில் களம் காண்பதாகக் கூறியுள்ளார்.

நல்லசாமி விடுத்துள்ள இந்த 10 கோடி ரூபாய் மற்றும் இனோவா கார் சவாலுக்கு எடப்பாடி தரப்பிலிருந்தும், தமிழக அரசிடமிருந்தும் என்ன பதில் வரப்போகிறது என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Related News

Latest News