தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 9ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 11ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே, குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
