ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு குட் நியூஸ்…

ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களைப் பெற குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு பெற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு கேஸ் இணைப்பு ரசீது கட்டாயம் என்ற தகவல் பரவி வந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய மின்னணு குடும்ப அட்டை பெற கேஸ் இணைப்பு ரசீது கட்டாயம் இல்லை. கேஸ் ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும் என எந்த அரசாணையும் உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சாசனம் 2018-ன்படி, புதிய குடும்ப அட்டை பெற குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் விவரங்கள் கட்டாய ஆவணமாகும். மேலும் முகவரி ஆதாரமாக கேஸ் இணைப்பு ரசீது, சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தம் அல்லது மின் கட்டண ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு மக்கள் சாசனம் 2018-ல் 60 நாட்கள் காலவரையறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், 04.07.2024 புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்ட காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News