தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
