சர்வதேச ராஜதந்திர நகர்வுகளில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வரவிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டிற்குப் பிறகு ஜி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இது என்பதால், ஆசியாவின் இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை ஜி ஜின்பிங் வெறும் விருந்தினராக மட்டும் வரவில்லை, சுமார் 400 அதிகாரிகள் கொண்ட ஒரு மிகப்பெரிய குழுவையும் தன்னுடனேயே அழைத்து வரவிருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது வெறும் 200 அதிகாரிகள் மட்டுமே உடன் வந்தனர். ஆனால், இந்த முறை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்காக டெல்லியில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் முன்பதிவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சீன அதிகாரிகள் இப்போதே முடுக்கி விட்டுள்ளனர். செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது.
இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்ததால் போர் பதற்றம் நிலவியது. இருப்பினும், கடந்த 2024 அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை விலகல் ஒப்பந்தம், இந்த உறவில் ஒரு மெல்லிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சருடன் எல்லைப் பிரச்சனைகள் குறித்து தீவிரமாகப் பேசி வருகிறார்.
இது ஜி ஜின்பிங் வருகைக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவிருப்பது, எல்லையில் நிலவும் எஞ்சிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
3,800 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைக் கோட்டில் அமைதியை நிலைநாட்ட இந்தச் சந்திப்பு வழிவகுக்குமா என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகப் பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜி ஜின்பிங்கின் இந்த வருகை இந்தியா – சீனா இடையிலான மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
