மர்மம், பதற்றம், பரபரப்பு… இதுதான் இப்போது இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் சூழல். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சிகரமான தகவல் இப்போது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
“எனது மகன்களில் ஒருவரை ஈரான் கொலை செய்ய முயற்சி செய்தது” என்று நெதன்யாகு ஒரு பேட்டியில் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது சர்வதேச அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
இஸ்ரேலின் முன்னணி செய்தி சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த நெதன்யாகு, தனது குடும்பத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்துப் பேசும்போது இந்த ரகசியத்தை உடைத்துள்ளார்.
“நம்பவே முடியாத சில கொடூரமான நிகழ்வுகள் கடந்த காலத்தில் அரங்கேறின. எனது மகன்களில் ஒருவரை ஈரான் குறி வைத்தது, அவரைத் தீர்த்துக்கட்டவும் ஒரு மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டது” என்று அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
ஆனால், அந்த கொலை முயற்சி எப்போது நடந்தது? எங்கே நடந்தது? அல்லது எந்த மாதிரியான சதித் திட்டம் தீட்டப்பட்டது? என்பதைப் பற்றிய விவரங்களை அவர் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.
பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு யாயிர் மற்றும் அவ்னீர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் யாயிர், கடந்த 2024-ம் ஆண்டு முதலே அமெரிக்காவின் மியாமியில் வசித்து வருகிறார்.
அவருக்கு இஸ்ரேலின் மிக உயரிய பாதுகாப்பு அமைப்பான ‘ஷின் பெட்’ (Shin Bet) பலத்த பாதுகாப்பு அளித்து வருகிறது. இளைய மகன் அவ்னீர் பெரும்பாலும் இஸ்ரேலிலேயே தங்கியிருக்கிறார்.
இந்த இருவரில் யாரை ஈரான் குறிவைத்தது என்பதை நெதன்யாகு வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தனது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்பது ஆடம்பரமான ஒன்று கிடையாது, அது தங்களின் உயிரைக் காக்க மிக அவசியமானது என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பைக் குறைப்பது தொடர்பான விவாதங்கள் எழுந்த நிலையில், நெதன்யாகு தனது மகனின் உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமரின் மகனுக்கே குறிவைக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
நெதன்யாகுவின் இந்தப் புகார் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. ஒரு நாட்டின் பிரதமரின் குடும்பத்தையே குறிவைக்கும் அளவுக்கு இந்த மோதல் முற்றியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
