‘விஜய் சாரிடம் நிறைய கத்துக்கிட்டேன்’ – தமிழக அரசியலைப் புகழ்ந்த ‘யாஷ்’!

தமிழ்நாடு மற்றும் கன்னடத் திரையுலகிற்கு இடையே ஒரு அழகான நட்புறவுப் பாலம் எப்போதும் உண்டு. அந்தப் பாலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ‘கே.ஜி.எப்’ நாயகன் யாஷ், தனது ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காகச் சென்னை வந்திருந்தார்.

வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து யாஷ் பேசிய வார்த்தைகள் இப்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

குறிப்பாக, முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ சந்திந்த சோதனைகள் குறித்து யாஷ் மிகவும் உருக்கமாகப் பேசினார்.

‘டாக்ஸிக்’ மற்றும் ‘ஜன நாயகன்’ ஆகிய இரண்டு படங்களையுமே கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கை குழுவின் தடைகள் மற்றும் இணையதளக் கசிவு எனப் பல சவால்களைச் சந்தித்தது.

இது குறித்துப் பேசிய யாஷ், “ஜன நாயகன் திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆனபோது, அந்தத் தயாரிப்பாளர் எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதை நான் அருகில் இருந்து பார்த்தேன்.

ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் விஜய் சார் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு ஈடுஇணையற்றது. கே.ஜி.எப் படத்திற்கு நீங்கள் கொடுத்த அதே அன்பை இப்போதும் உணர்கிறேன்.

சினிமா என்பது வெறும் மொழி சார்ந்தது அல்ல, அது ஒட்டுமொத்த இந்திய சினிமா” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் யாஷ் தனது வியப்பைப் பகிர்ந்து கொண்டார். “விஜய் சாரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

அவரது அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் எனக்குப் பெரிய உத்வேகம் அளிக்கிறது. மக்கள் அவர் மீது வைத்துள்ள அளவற்ற அன்பினால் தான் இன்று அவர் இந்த உயரிய இடத்தில் இருக்கிறார்.

மக்களுக்குத் திரும்பச் செய்ய வேண்டிய கடமை இப்போது அவருக்கு இருக்கிறது. இது போன்ற ஒரு நேர்மையான அரசியல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவை” என்று யாஷ் மனதாரப் பாராட்டினார்.

இந்த விழாவின் சிகரமாக, தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களின் புகழ்பெற்ற வசனங்களைப் பேசி யாஷ் அரங்கத்தையே அதிரவைத்தார். “வணக்கம் தமிழக மக்களே…

என் ரத்தத்தின் ரத்தமான என்று சொல்லலாம் என்றால் அதை எம்.ஜி.ஆர் சார் சொல்லிட்டாரு, என்னை வாழவைத்த தெய்வங்களே என்று சொல்லலாம் என்றால் அதைத் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிட்டாரு, என் நெஞ்சில் குடியிருக்கும் என்று சொல்லலாம் என்றால் அதைத் தளபதி விஜய் சி.எம் சார் சொல்லிட்டாரு. உங்களை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை, என்னைத் தத்தெடுத்த தமிழ் மக்களே என்று தான் சொல்ல வேண்டும்” என்று அவர் பேசியபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.

1940 முதல் 70-களுக்கு இடைப்பட்ட கோவாவின் பின்னணியில், ஒரு அதிரடி கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’, யாஷ்ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News